இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அங்கீகாரமில்லாத நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுடன் முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆடியது. இந்த தொடரை இந்தியா ஏ அணி வென்றது. அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான அங்கீகாரமில்லாத இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இந்திய அணி, அந்த தொடரை 1-0 என வென்றது. 

இதையடுத்து இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் 4 நாட்கள் டெஸ்ட் போட்டியில் ஆடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தொடக்க வீரர் அலெஸ்டர் குக், 180 ரன்களை குவித்தார். நிக் கபின்ஸ், மாலன் ஆகியோரும் சிறப்பாக ஆட, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 423 ரன்களை குவித்தது. 

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் முரளி விஜய், மயன்க் அகர்வால், கருண் நாயர் ஆகியோர் சோபிக்கவில்லை. அவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பிரித்வி ஷா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் மட்டுமே அரைசதம் கடந்தனர். ரஹானே 49 ரன்களில் அவுட்டானார். இந்திய ஏ அணி 197 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

227 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி, 5 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து 421 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில், இந்த முறையும் ரிஷப் பண்ட் மற்றும் ரஹானேவை தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. அதனால் இந்திய ஏ அணி 167 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து இங்கிலாந்து லயன்ஸ் அணி, 253 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.