லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக ஒருநாள் தாமதமாக தொடங்கிய ஆட்டத்தில், டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 

இங்கிலாந்து அணியின் அனுபவ பவுலர் ஆண்டர்சன் வீசிய ஸ்விங் பந்துகளை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, தொடக்கம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டது. 131 ரன்களுக்கே அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்தபோதிலும் பேர்ஸ்டோ மற்றும் வோக்ஸ் சிறப்பாக ஆடி, 6வது விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தனர். பேர்ஸ்டோ 93 ரன்கள் குவித்தார். சதமடித்த வோக்ஸ், 137 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சாம் கரண் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 6 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

289 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் முரளி விஜய், முதல் இன்னிங்ஸை போலவே இதிலும் ஆண்டர்சன் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். ராகுல் 10 ரன்களில் வெளியேறினார். புஜாரா, ரஹானே, கோலி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, இந்திய அணி 61 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தது. ஹர்திக் பாண்டியாவும் அஷ்வினும் நிலைத்து ஆடினர். ஆனால் இதுவும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஹர்திக் பாண்டியா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய குல்தீப் யாதவ், ஷமி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். எனினும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய அஷ்வினின் விக்கெட்டை இங்கிலாந்து பவுலர்களால் வீழ்த்தமுடியவில்லை. கடைசி விக்கெட்டாக இஷாந்த் சர்மா அவுட்டாக, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

அஷ்வின், கடைசி வரை அவுட்டாகாமல் 33 ரன்கள் எடுத்திருந்தார். முதல் இன்னிங்ஸிலும் அஷ்வின் அடித்த 29 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோர். இரண்டு இன்னிங்ஸ்களிலும் அஷ்வின் நிதானமாகவும் தெளிவாகவும் பேட்டிங் ஆடினார். 

இந்த போட்டியிலும் தோல்வியடைந்ததன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.