இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆடுகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் வீச விரும்பியதால், இந்திய அணி பேட்டிங் செய்தது. 

தொடக்க வீரர்களா ஷிகர் தவானும் ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். முதல் ஓவரை எதிர்கொள்ளவே திணறிய ரோஹித் சர்மா, இரண்டாவது ஓவரிலேயே வெறும் 5 ரன்களில் வெளியேறினார். ஷிகர் தவான் அசால்ட்டால், 10 ரன்களில் அவுட்டானார். கடந்த போட்டியில் சதமடித்த ராகுல், 6 ரன்களில் பிளன்கெட் பவுலிங்கில் போல்டாகி வெளியேறினார். 

இதையடுத்து கோலி - ரெய்னா இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. ரெய்னா 27 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு கோலியும் தோனியும் ஜோடி சேர்ந்தனர். கோலி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். 19 ஓவருக்கு 126 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது. கடைசி ஓவரில் தோனி மூன்று பவுண்டரிகளும் ஹர்திக் பாண்டியா ஒரு பவுண்டரியும் அடிக்க, வைடு, நோ பால் ஆகியவையும் வீசப்பட்டன. கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்கள் குவிக்கப்பட்டன. 

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை குவித்தது. 

149 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியை அவ்வளவு எளிதாக இந்திய பவுலர்கள் வெற்றி பெறவிடவில்லை. ஜேசன் ராயை 15 ரன்களிலும், கடந்த முறை அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பட்லரை 14 ரன்களிலும் வெளியேற்றினார் உமேஷ் யாதவ். ஜோ ரூட் 9 ரன்களும், இயன் மோர்கன் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அலெக்ஸ் ஹேல்ஸ் நிதானமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். அவருக்கு பேர்ஸ்டோவும் உதவியாக இருந்தார். பேர்ஸ்டோ 28 ரன்களில் அவுட்டானார். 

தொடக்கம் முதலே இங்கிலாந்து அணியை பெரிதாக அடித்து ஆடவிடவில்லை இந்திய பவுலர்கள். 19 ஓவருக்கு அந்த அணி, 137 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவர்களை வீசுவதில் வல்லவரான புவனேஷ்வர் குமார் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரும் இரண்டாவது பவுண்டரியும் விளாசி மிரட்டினார் அலெக்ஸ். இதையடுத்து 19.4 ஓவரில் இலக்கை எட்டி இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக அலெக்ஸ் ஹேல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. கடைசி போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும்.