இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது போட்டி மழை காரணமாக ஒருநாள் தாமதமாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்து பவுலர்களின் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 107 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 131 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோவின் அருமையான ஆட்டத்தால் மீண்டெழுந்தது. 6வது விக்கெட்டுக்கு 189 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. 93 ரன்களில் பேர்ஸ்டோ அவுட்டானார். இதையடுத்து வோக்ஸுடன் சாம் கரண் ஜோடி சேர்ந்தார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து அணி. வோக்ஸ் 120 ரன்களுடனும் சாம் கரண் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

நான்காம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதிலிருந்தே சாம் கரண் அதிரடியாக ஆடினார். சாம் கரண் 40 ரன்களில் ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் அவுட்டானார். இதையடுத்து 396 ரன்கள் எடுத்த நிலையில், முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. 

289 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் முரளி விஜய், இம்முறையும் ஆண்டர்சனின் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து ராகுலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். ராகுலும் 10 ரன்களில் ஆண்டர்சனின் பந்துவீச்சில் அவுட்டானார். 13 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறிவருகிறது.