Asianet News TamilAsianet News Tamil

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இங்கிலாந்து!! இந்திய அணிக்கு காத்திருக்கிறது கடும் சவால்

இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக ஆடிவருகிறது. இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அந்த அணிக்கு உள்ளது.
 

england batting well in first innings of lords test
Author
England, First Published Aug 12, 2018, 9:54 AM IST

இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக ஆடிவருகிறது. இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அந்த அணிக்கு உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது போட்டி மழை காரணமாக ஒருநாள் தாமதமாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்து பவுலர்களின் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 107 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் தொடக்கத்திலிருந்தே ரன்களை குவிக்க தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்களை குவிக்க அந்த அணி தயங்கவில்லை. தொடர்ச்சியாக சீரான வேகத்தில் ரன்களை குவித்தது. 

131 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், பேர்ஸ்டோ மற்றும் கிறிஸ் வோக்ஸ் இருவரும் அபாரமாக ஆடினர். 6 விக்கெட்டுக்கு அவர்கள் 189 ரன்களை சேர்த்தனர். 93 ரன்களில் அவுட்டான பேர்ஸ்டோ சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ஆனால் கிறிஸ் வோக்ஸ் அபாரமாக ஆடி சதமடித்தார். 

england batting well in first innings of lords test

வோக்ஸுடன் சாம் கரண் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. வோக்ஸ் 120 ரன்களுடனும் சாம் கரண் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்திய அணியை விட 250 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் உள்ளது இங்கிலாந்து அணி. எனவே இன்னும் கூடுதலாக 100 ரன்கள் சேர்த்தாலே மிகவும் வலுவான நிலையை அடைந்துவிடும் இங்கிலாந்து. எனவே இந்த போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனினும் டிரா செய்வதற்கே இந்திய அணி மிகவும் சிறப்பாக ஆட வேண்டியுள்ளது. இல்லையெனில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைய நேரிடும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios