லார்ட்ஸ் ஆடுகளத்தின் நிலையை பொறுத்தவரை, எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு நாங்கள் பந்துவீசியிருந்தாலும் இந்திய அணிக்கு நடந்ததுதான் நடந்திருக்கும் என இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவருகிறது. மழை காரணமாக ஒருநாள் தாமதமாக நேற்று தொடங்கப்பட்ட போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. 

லார்ட்ஸ் ஆடுகளம் புற்களுடன் இருந்ததால் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. எனவே முதலில் பேட்டிங் ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பவுலர்களின் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி, விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிலும் அதிக அனுபவமிக்க பவுலரான ஆண்டர்சனின் பந்துவீச்சை எதிர்கொள்ள மோசமாக திணறினர். தனது அனுபவத்தையும் ஆடுகளத்தின் தன்மையையும் நன்றாக பயன்படுத்திக்கொண்ட ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 107 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய ஆண்டர்சன், இந்த ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டும் எங்களது பந்துவீச்சில் திணறியதாக நினைக்கவில்லை. இந்த ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி உலகின் எந்த அணியின் பேட்டிங் வரிசையையும் எங்களால் சரித்துவிடமுடியும். எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நாங்கள் பந்துவீசினாலும் இதேதான் நடந்திருக்கும். பவுலிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நன்றாக பந்துவீசவில்லை என்றால், மிகவும் மனக்கஷ்டமாக இருந்திருக்கும் என ஆண்டர்சன் தெரிவித்தார்.