பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்துவரும் உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் கடலூரை சேர்ந்த இளவேனில் வளரிவான் என்ற தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடந்துவருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் 251.7 புள்ளிகளை பெற்று சாதனை படைத்த இளவேனில் வளரிவான், தங்கம் வென்று நமது நாட்டிற்கும் நமது மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். 

இளவேனில் வளரிவானுக்கு அடுத்த இடத்தை பிடித்த பிரிட்டன் வீராங்கனை பெற்ற புள்ளிகள் 250.6 தான். சுமார் 1 புள்ளி வித்தியாசத்தில் வென்றுள்ளார் இளவேனில். இந்த புள்ளி வித்தியாசம் உண்மையாகவே மிகப்பெரியது. இது சாதாரண வெற்றி அல்ல. இளவெனில் மூலமாக இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. 

கடலூரை சேர்ந்த இளவேனில் வளரிவான், கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை ஜூனியர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் உலக கோப்பையில் தங்கம் வென்று கொடுத்த இளவேனில், சீனியர் பிரிவிலும் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்துள்ளார். 

இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த அபுர்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகிய இரண்டு வீராங்கனைகள் மட்டுமே உலக கோப்பை துப்பாக்கிச்சூட்டில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றவர்கள். 

உலக கோப்பை துப்பாக்கிச்சூடு போட்டியில் நாட்டிற்கு தங்கம் வென்று பெருமை சேர்த்து கொடுத்த இளவேனில் வளரிவானுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.