நாங்கள் எந்த நாட்டில், எந்த சூழலில் ஆடுகிறோம் என்பதை பற்றி கவலையில்லை. எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த சூழலிலும் சிறப்பாக வீசுவார்கள் என தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டிற்கும் குறைவாகவே உள்ளதால், அனைத்து அணிகளும் இப்போதிலிருந்தே தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் நல்ல ஃபார்மில் உள்ளனர். பேட்டிங், பவுலிங் என அனைத்து துறையிலும் சம பலம் வாய்ந்த அணிகளாக திகழ்கின்றன. 

தற்போது ஸ்மித், வார்னர் இல்லாமல் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி தற்போது மெதுவாக மீண்டெழுகிறது. உலக கோப்பைக்குள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு விதிக்கப்பட்ட தடை முடிந்துவிடும் என்பதால் அவர்களும் அணியில் ஆடுவார்கள் என்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். 

இதுவரை உலக கோப்பையை ஒருமுறை கூட வென்றிராத இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம்.

உலக கோப்பைக்கு முன்னதாக அனைத்து அணிகளுக்கும் முக்கியமான தொடர்கள் உள்ளன. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் நாளை தொடங்குகிறது. 

இதேபோல, இலங்கை செல்லும் தென்னாப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 கொண்ட தொடரில் ஆட உள்ளது. ஜூலை 12ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது. 

இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ், எந்த நாட்டில் எந்த சூழலில் ஆடுகிறோம் என்பதை பற்றி கவலையில்லை. இலங்கை ஆடுகளங்கள் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமானதாக இருந்தாலும்கூட, அதிலும் எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசுவார்கள்.

எங்களிடம் ஸ்டெயின், ரபாடா, பிளாண்டர் ஆகிய தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைத்து சூழலிலும் நன்றாக பந்துவீசக் கூடியவர்கள் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளனர். ஆசிய கண்டத்தில் ஸ்டெயின் சிறப்பான சாதனைகளை படைத்துள்ளார். ரபாடா மற்றும் பிளாண்டரும் அருமையான பவுலர்கள் என டுபிளெசிஸ் தெரிவித்துள்ளார். 

இதேபோன்றதொரு நம்பிக்கையைத்தான் கோலியும் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அயர்லாந்தை வீழ்த்திய பிறகு இங்கிலாந்தில் ஆட இருக்கும் இந்திய அணியின் கேப்டன் கோலியும், எந்த நாட்டில் ஆடுகிறோம்? எதிரணி யார் என்பதை பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் சிறந்த அணி. எங்கள் அணி ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக வீசி, முக்கிய பங்காற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.