இந்திய அணியில் நீண்ட நாட்களாக இடம் கிடைக்காமல் தவித்துவரும் தினேஷ் கார்த்திற்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இந்திய அணியில் தோனி இருப்பதால் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தோனியின் ஓய்விற்கு பிறகே இந்திய அணியில் மற்றொரு விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பு கிடைக்கும். அதுவரை அவர் ஆடாத போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2014ம் ஆண்டே ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால் தோனியின் இடம் தினேஷ் கார்த்திற்கு கிடைக்கவில்லை. மாறாக ரிதிமான் சஹாவிற்கு கிடைத்தது. 

அவர் தான் டெஸ்ட் போட்டிகளில் ஆடிவந்தார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சஹாவிற்கு மாற்றாக பார்த்திவ் படேல் சேர்க்கப்பட்டார். அப்போதும் தினேஷ் கார்த்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

ஆனால் இலங்கையில் நடந்த நிதாஹஸ் டிராபி முத்தரப்பு டி20 தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடி தனது திறமையை மீண்டுமொரு முறை நிரூபித்த தினேஷ் கார்த்திக் அணி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். 

அதன் விளைவாக, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய சஹாவிற்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணியிலும் இடம்பிடித்தார். 

இந்நிலையில், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சஹா ஆடமாட்டார் என கூறப்படுகிறது. குறைந்தது அவருக்கு இன்னும் 4 வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதால், அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்வார் எனவும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடினால், டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது.