அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோனிக்கு பதில் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி ஆடிவருகிறது. கடந்த 27ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதால், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றனர். ஆனால் முதல் போட்டியில் ஆட இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 

ஐபிஎல்லில் சரியாக ஆடாமல் மற்றும் ஃபார்மில் இல்லாமல் தவித்த மனீஷ் பாண்டேவிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும் முதல் போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் விராட் கோலி, இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இனிவரும் போட்டிகளில் சில சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அணியில் அனைவருக்கும் ஆட வாய்ப்பளிக்கப்படும் எனவும் கூறினார். 

இதையடுத்து, இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ராகுலுக்கு ஆட வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனீஷ் பாண்டே அல்லது ரெய்னாவிற்கு பதிலாக ராகுல் சேர்க்கப்படுவார். 

அதேபோல தோனியை நீக்கிவிட்டு இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. தினேஷ் கார்த்திக் அயர்லாந்தின் டப்ளினில் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. அவர் விக்கெட் கீப்பிங் பயிற்சி எடுப்பதால், இரண்டாவது போட்டியில் கீப்பர் தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட அதிகமான வாய்ப்புள்ளது.