ஒருநாள் அணிக்கு ரெய்னாவை காட்டிலும் தினேஷ் கார்த்திக்கே தனது தேர்வு என முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என வென்றது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அம்பாதி ராயுடு, யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் இலங்கையில் நடந்த நிதாஹஸ் டிராபி இறுதி போட்டி மற்றும் ஐபிஎல் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடி தனது திறமையை மீண்டுமொரு நிரூபித்த தினேஷ் கார்த்திக்கும் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

அணியில் இடம்பிடித்திருந்தாலும் தினேஷ் கார்த்திற்கு ஆடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஒருநாள் அணியில் மிடில் ஆர்டரில் ராகுல், ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். ரெய்னாவைவிட தினேஷ் கார்த்திக்கே அந்த இடத்திற்கு சரியாக இருப்பார் எனவும் தினேஷ் கார்த்திக்கின் ஃபார்மை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இது எனவும் சேவாக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதே கருத்தை கவுதம் காம்பீரும் தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிக்கு ரெய்னாவைக் காட்டிலும் தினேஷ் கார்த்திக்தான் என்னுடைய தேர்வு. சுழல் பந்து, வேகப்பந்து என இரண்டு விதமான பந்துவீச்சுகளையும் திறம்பட கையாளக்கூடியவர் தினேஷ் கார்த்திக்.

அதனால் அவர்தான் ரெய்னாவை சரியான தேர்வு என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். சேவாக், காம்பீர் என தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவு பெருகிவருகிறது.