இந்திய அணியை மீட்டெடுத்து சதத்தை நோக்கி தினேஷ் கார்த்திக்!! கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய தினேஷ்

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக எஸெக்ஸ் கவுண்டி அணியுடன் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆடிவருகிறது. 

இது, அங்கீகாரமில்லாத போட்டி என்பதால் இந்திய அணியின் 18 வீரர்களையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். 

முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஷிகர் தவான் அவுட்டாகி பேரதிர்ச்சியை கொடுத்தார். அதன்பிறகு களமிறங்கிய புஜாரா, 1 ரன்னில் வெளியேறினார். இதனால் 5 ரன்களை எடுப்பதற்குள் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதையடுத்து முரளி விஜயுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி, இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டியது. ஆனால் அதுவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 17 ரன்கள் எடுத்த நிலையில் ரஹானே பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து முரளி விஜயுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் நிதானமாக ஆட, விராட் கோலி சீரான வேகத்தில் ரன்களை குவித்ததால் 28வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. இவர்கள் இருவரும் இக்கட்டான நிலையில் இருந்து அணியை மீட்டெடுத்தனர். 53 ரன்கள் எடுத்த நிலையில், முரளி விஜயும் அவுட்டானார். 

அதன்பிறகு கோலியுடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். ஆனால் ராகுல் களத்திற்கு வந்த சில நிமிடங்களில் கோலி 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடினார். இந்த போட்டியில் இதுவரை அதிகபட்சமாக 114 ரன்களை இந்த ஜோடி குவித்தது. ராகுல் 58 ரன்களில் ஆட்டமிழக்க, தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து ஹர்திக் பாண்டியா ஆடிவருகிறார்.

தினேஷ் கார்த்திக்கும் ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக ஆடிவருகின்றனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில், தினேஷ் கார்த்திக் 82 ரன்களுடனும் பாண்டியா 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சஹா இல்லாததால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தினேஷ் கார்த்திக் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். எனினும் இது பயிற்சி போட்டி என்பதால், இதேபோல டெஸ்ட் போட்டியிலும் ஆடினால், தினேஷ் கார்த்திக்கிற்கான இடம் டெஸ்ட் அணியில் உறுதி செய்யப்படும்.