ஜார்கண்ட் மாநிலத்தில் 2017-2018ம் நிதியாண்டில் அதிகமான வருமான வரி தாக்கல் செய்தது தோனி தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச அளவில் முன்னணி விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். விளையாட்டு, விளம்பரங்கள் என தோனி அதிகமான வருமானம் ஈட்டிவருகிறார். 

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் 2017-2018ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்தவர்கள் விவரத்தை வருமான வரித்துறை நேற்று வெளியிட்டது. அதில், 2017-2018ம் நிதியாண்டுக்கான வருமான வரியாக மொத்தம் 12 கோடியே 17 லட்சம் ரூபாயை தோனி கட்டியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்மூலம் ஜார்கண்ட் மாநிலத்தை பொறுத்தமட்டில் அதிகமான வருமான வரி செலுத்தியிருப்பதில் தோனி தான் முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2016 - 2017ம் நிதியாண்டில் 10 கோடியே 93 லட்சம் ரூபாயை தோனி வரியாக செலுத்தியது குறிப்பிடத்தக்கது.