ரிக்கி பாண்டிங் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு, 2008ல் அப்போதைய இந்திய அணியின் இளம் கேப்டன் தோனி பாடம் புகட்டிய சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2002லிருந்து சுமார் 7 முதல் 8 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத சக்தியாக கிரிக்கெட் உலகில் திகழ்ந்தது. பாண்டிங் தலைமையில் 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு உலக கோப்பைகளை ஆஸ்திரேலிய அணி வென்றது. 

எந்த அணியுடன் மோதினாலும் வெற்றி, எல்லா தொடரிலும் வெற்றி, தரவரிசையில் முதலிடம் என அந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தான் ஆதிக்கம் செலுத்தியது. பாண்டிங் தலைமையிலான அந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கிய அணி அது. எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதே அந்த அணியின் ஒற்றை இலக்கு.

எந்த அணியாலும் தங்களை வீழ்த்த முடியாது என்ற ஆணவத்துடனும் அதற்கான திறமையுடனும் வலம்வந்த ஆஸ்திரேலிய அணிக்கு அப்போதைய இந்திய அணியின் இளம் கேப்டனான தோனி, ஆஸ்திரேலியா வீழ்த்த முடியாத அணி அல்ல என்பதை அந்த அணிக்கு சவுக்கடி கொடுத்து சுட்டிக்காட்டினார். 

2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் பேங்க் தொடரின் மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி இலக்கை விரட்டியபோது, வெற்றிக்கு இன்னும் 10 ரன்களே தேவை என்ற நிலையில், களத்தில் தோனியும் ரோஹித்தும் இருந்தனர். அப்போது கையுறை கேட்பது போன்று ஓய்வறைக்கு ஒரு செய்தி அனுப்பினார். நாம் வெற்றி பெற்றதும் அதை பெரியளவில் கொண்டாட வேண்டாம் என்று ஓய்வறைக்கு செய்தி அனுப்பினார். எதிர்முனையில் ஆடிய ரோஹித்திடமும் அதை தெரிவித்துவிட்டார். 

வெற்றி பெற்றதும் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை கொண்டாடவில்லை. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது என்பது பெரிய விஷயம் அல்ல என்பதையும் இந்த வெற்றி அதிர்ஷ்டத்திலோ எதிர்பாராத விதமாகவோ கிடைத்த வெற்றி அல்ல என்பதையும் அந்த அணிக்கு உணர்த்தினார். வலுவான அணியான நமக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டு அதை இந்திய அணி கொண்டாடவில்லை என்பதை ஆஸ்திரேலிய அணி உணர வேண்டும் என்பதே தோனியின் எண்ணம். காமன்வெல்த் பேங்க் தொடரையும் இந்திய அணியே வென்றது.

இந்த தகவல் தோனி குறித்து எழுதப்பட்ட தி தோனி டச் என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.