சச்சின், தோனி ஆகிய இருவருமே கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட்டிற்கு பெரும் பங்காற்றியுள்ளனர். ஆனாலும் ஒரு வீரராக பல சாதனைகளை தன்னகத்தே கொண்ட சச்சின் டெண்டுல்கர் தான் கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படுகிறார்.

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதங்கள் உள்ளிட்ட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். 24 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிய சச்சின் டெண்டுல்கர், எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்த சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படுகிறார். 

இந்திய அணிக்கு கிடைத்த வீரர்களில் மிகச்சிறந்த வீரர் சச்சின் என்றால், சிறந்த கேப்டனாக வலம்வந்தவர் தோனி. தோனி சிறந்த வீரர்தான் என்றாலும், அவரது ஆட்டத்தை விட கேப்டன்சிக்கு பெயர்போனவர் தோனி. இந்திய அணிக்கு மூன்றுவிதமான சாம்பியன்ஷிப்பை வென்று கொடுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் தோனி. 

சச்சினும் தோனியும் இந்திய கிரிக்கெட்டிற்கு அளப்பரிய பங்காற்றியுள்ளனர் என்றாலும், சச்சின் தான் கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்பட்டு வருகிறார். 

இந்நிலையில், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அளித்த பேட்டி ஒன்றில், தன்னை பொறுத்தவரை தோனி தான் கிரிக்கெட் கடவுள் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய சுனில் ஷெட்டி, தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவே கூடாது. என்னை பொறுத்தவரை அவர் தான் கிரிக்கெட் கடவுள். அவரை போன்ற ஒரு கேப்டனை பார்க்கவே முடியாது. எத்தனையோ கேப்டன்கள் இருக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் சரியான வீரரை பயன்படுத்துவதில் தோனி தான் வல்லவர் என சுனில் ஷெட்டி தெரிவித்தார்.

தோனி சிறந்த வீரர் மற்றும் சிறந்த கேப்டன் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது. எனினும் கிரிக்கெட் கடவுள் என்றால் அது சச்சின் தான் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மேலும் சுனில் ஷெட்டி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்பதால், ரசிகர்கள் தங்களது கருத்தையும் தெரிவித்துவருகின்றனர்.