சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை தோனி கடக்க உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக இன்று நடக்க உள்ள முதல் ஒருநாள் போட்டியில் தோனி இந்த மைல்கல்லை எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி, 2-1 என வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்த போட்டியில் தோனி 33 ரன்கள் எடுத்தால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை எடுத்துவிடுவார்.

இதுவரை 318 ஒருநாள் போட்டிகளில் ஆடி, 10 சதங்கள் மற்றும் 67 அரைசதங்களுடன் 9967 ரன்களை குவித்துள்ளார் தோனி. 10000 ரன்களை எட்ட இன்னும் 33 ரன்களே தேவை. இந்த மைல்கல்லை எட்டப்போகும் நான்காவது இந்திய வீரர் தோனி ஆவார். முன்னதாக சச்சின், கங்குலி, டிராவிட் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்துள்ளனர்.

அதேபோல், சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டப்போகும் 12வது வீரர் தோனி. தோனிக்கு முன்னதாக சச்சின், சங்ககரா, ரிக்கி பாண்டிங், ஜெயசூர்யா, ஜெயவர்தனே, இன்சமாம் உல் ஹக், ஜாக் காலிஸ், கங்குலி, டிராவிட், லாரா, தில்ஷன் ஆவர். 

சங்ககராவிற்கு பிறகு 10000 ரன்களை எட்டப்போகும் இரண்டாவது விக்கெட் கீப்பர் தோனி.