அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அந்த அணியில் அதிரடியாக ஆடிய ஷேனானுக்கு தோனி கொடுத்த ஆலோசனையின் படி பந்து வீசியதாக ஸ்பின் பவுலர் சாஹல் தெரிவித்தார். 

இந்தியா அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தவான் மற்றும் ரோஹித்தின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர் முடிவில் 208 ரன்களை குவித்தது. 

209 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷேனானைத் தவிர மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. ஷேனான் மட்டும் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்து 60 ரன்களில் வெளியேறினார். 

அதிரடியாக ஆடிய ஷேனான், ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹல் பவுலிங்கையும் அடித்து நொறுக்கினார். சாஹல் ஓவரில் ஓவருக்கு ஒரு சிக்ஸர் அடித்து சாஹலை மிரட்டினார். நல்ல உயரமாக இருந்த ஷேனான் அடித்து ஆடியதால் சிறிது நேரத்திற்கு அவர் பெரிய ஷாட்களை அடிக்க முடியாத அளவிற்கு ஆஃப் திசையிலேயே பந்தை வீசினார் சாஹல். சாஹல் ஆஃப் திசையில் வீசிய பந்துகளை ஷேனானால் சிக்ஸருக்கு அனுப்ப முடியவில்லை. அப்படி வீசவில்லை என்றால், சாஹல் பந்தை இன்னும் பயங்கரமாக அடித்திருப்பார் ஷேனான். 

இந்த போட்டியில் சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டிக்கு பிறகு இதுதொடர்பாக சாஹலிடம் முரளி கார்த்திக் கேள்வி எழுப்பினார். ஷேனானுக்கு ஆஃப் திசையிலேயே வீசியதற்கு என்ன காரணம்? நீங்களாக வீசினீர்களா? அல்லது தோனியோ கோலியோ ஆலோசனை வழங்கினார்களா? என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த சாஹல், ஷேனான் நல்ல உயரமாக இருந்ததால் அவருக்கு ஆஃப் திசையிலேயே பந்துவீசும்படி தோனி தான் அறிவுறுத்தினார். தோனியின் ஆலோசனையின் படி தான் ஆஃப் திசையில் வீசினேன் என சாஹல் தெரிவித்தார். 

விக்கெட் கீப்பர் தோனி, கீப்பிங் செய்யும்போது எந்த திசையில் பவுலிங் செய்ய வேண்டும் என பவுலர்களுக்கு முக்கியமான தருணங்களில் அறிவுறுத்துவது வழக்கம்தான். அது பல நேரங்களில் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், நேற்று சாஹலின் பந்தை மேலும் அடித்து ஆடவிடாத அளவிற்கு அவருக்கு ஆலோசனையை கூறி ஷேனானின் அதிரடியை கட்டுப்படுத்தியுள்ளார் தோனி.