தோனி கேப்டனாக இருந்தபோது வென்ற கோப்பைகளை வீரர்களிடம் கொடுத்துவிட்டு கேமரா வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி நிற்பது அவரது வழக்கம். அதற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக திகழ்ந்தவர். இந்திய அணிக்காக டி20 உலக கோபை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்தவர். 

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த தோனியிடம், தலைமைத்துவத்துக்கான அனைத்து காரணிகளும் உள்ளன. தோனியின் தலைமையில் இந்திய அணி, பல கோப்பைகளை வென்றது. அந்த கோப்பைகளுடன் அணியினர் புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போது தோனி ஒதுங்கியே நிற்பார்.

அதற்கான காரணத்தை தோனி விளக்கியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள தோனி, ஒரு அணியாக ஆடும் விளையாட்டில் கேப்டன் மீது மட்டும் வெளிச்சம் படுவது சரியாக இருக்காது. கோப்பையை கேப்டன் வாங்கும் அந்த 15 நொடிகளிலேயே மொத்த வெளிச்சமும் கேப்டனும் நோக்கி திரும்பிவிடுகின்றன. அப்படியிருக்கையில், அதன்பிறகும் கேப்டன் முக்கியத்துவம் பெறுவது சரியாக இருக்காது. வீரர்கள் மீது வெளிச்சம்படுவது தான் சரி. அதனால் தான் ஒதுங்கியிருப்பேன் என தோனி தெரிவித்துள்ளார்.