அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியதன் மூலம் தோனி மற்றும் ரெய்னா ஆகிய இருவரும் தனித்துவம் வாய்ந்த சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். 

அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடிவருகிறது. இதில் முதல் போட்டி கடந்த 27ம் தேதி நடந்தது. இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. 

அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டி, இந்திய அணியின் 100வது சர்வதேச டி20 போட்டி. இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோனியும் ரெய்னாவும் ஆடினர். 

இதன் மூலம் தனித்துவமான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்திய அணியின் முதல் சர்வதேச டி20 போட்டியில் ஆடிய வீரர்களில் 100வது போட்டியிலும் ஆடியது இவர்கள் மட்டுமே. 

2006ம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி இந்திய அணி, தனது முதல் சர்வதேச போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதியது. அந்த அணியில் தோனியும் ரெய்னாவும் இடம்பெற்றிருந்தனர். சேவாக் தலைமையில் களம் கண்ட இந்திய அணி அந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 100வது சர்வதேச போட்டியில் ஆடியுள்ளது. முதல் போட்டியில் ஆடிய தோனியும் ரெய்னாவும் மட்டுமே 100வது போட்டியிலும் ஆடியுள்ளனர். பல தடைகள், விமர்சனங்களை கடந்து 12 ஆண்டுகளுக்கு பிறகும் தங்களை அணியில் தக்கவைத்துக்கொண்டு ஆடிவருகின்றனர்.

ரெய்னாவாவது இடையிடையே அணியில் ஆடும் வாய்ப்பை இழந்து, அதன்பிறகு மீண்டும் வாய்ப்பு பெற்று ஆடிவருகிறார். ஆனால் தோனியோ அவர் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கிய 2004ம் ஆண்டு  முதல் இன்றுவரை தனது இடத்தை யாராலும் அசைக்க முடியாத வகையில் தனிப்பெரும் சக்தியாக இருந்துவருகிறார்.