இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எதனடிப்படையில் தவான் நீக்கப்பட்டார் என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. விராட் கோலியை தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் சரியாக ஆடாததே தோல்விக்கு காரணம். இந்நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. 107 ரன்களுக்கே இந்திய அணி ஆல் அவுட்டானது. 

முதல் போட்டியில் புஜாரா சேர்க்கப்படாதது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. இரண்டாவது போட்டியில் ஷிகர் தவான் நீக்கப்பட்டு புஜாரா சேர்க்கப்பட்டார். இந்நிலையில், தவான் நீக்கப்பட்டதற்கு கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவான் தான் எப்போதும் பலிகடா என ஆதங்கமாக தெரிவித்துள்ளார் கவாஸ்கர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், தவானை நீக்கிய முடிவில் எனக்கு உடன்பாடில்லை. தவான் தான் எப்போதும் பலிகடா ஆக்கப்படுகிறார். முதல் போட்டியில் முரளி விஜய், ராகுலை காட்டிலும் தவான் அதிக ரன்களை அடித்துள்ளார். அவரை நீக்கியது சரியல்ல. ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்றதும் அணியிலிருந்து நீக்குவதற்கு, ஏன் அவரை இங்கிலாந்திற்கு அழைத்து செல்ல வேண்டும்? எதனடிப்படையில் ஷிகர் தவான் அணியிலிருந்து நீக்கப்பட்டார்? என கவாஸ்கர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.