மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு – பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு!
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்துதல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்ச்சாட்டப்பட்ட பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நடைபெற்று வந்த வழக்கில் கடந்த மாதம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க இருந்த நிலையில், கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் (ஏசிஎம்எம்) பிரியங்கா ராஜ்பூட், இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை கோரி நீதிமன்றத்தில் சிங் மனு அளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்க போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஐபிசி பிரிவு 354 (தாக்குதல்), 354ஏ (பாலியல் வன்கொடுமை), 354டி (பின் தொடர்தல்), 109 (உடந்தையாக இருத்தல்) மற்றும் 506 (மிரட்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரிவுகளின்படி குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
பிரிஜ் பூஷண் மற்றும் அவரது கூட்டாளி வினோத் தோமர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6 மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் பின்தொடர்ந்ததாக டெல்லி காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, 1,500 பக்க குற்றப்பத்திரிகையில், பிரிஜ் பூஷண் மீதான குற்றச்சாட்டுகளை ஆதரித்து மல்யுத்த வீராங்கனைகள், நடுவர், பயிற்சியாளர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் உட்பட நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 22 சாட்சிகளின் வாக்குமூலங்களை போலீஸார் சேர்த்துள்ளனர்.
போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் மேலே குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது