காஷ்மீரில் உள்ள புல்மாவாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு  கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி செய்வதாக கடந்த வாரம் அறிவித்தது.

2019 ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நேற்று  சென்னையில் தொடங்கியது. வழக்கமாக ஐபிஎல் தொடர் ஆரம்பமாகும்போது தொடக்க நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு புல்வாமா தாக்குதல் காரணமாகத் தொடக்க நிகழ்ச்சியை ரத்து செய்து அதற்காக ஒதுக்கப்படும் தொகையை மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது.

இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதியது.

சென்னை அணி இந்தப் போட்டியில் கிடைக்கும் வருமானத்தை புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியாக வழங்கும் எனத் தெரிவித்திருந்தது.  இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட் கர்னலாக உள்ள எங்கள் அணியின் கேப்டன் தோனி இதற்கான காசோலையை வழங்குவார் என்று தெரிவித்திருந்தது.

நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி  பெங்களூர அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

இதனிடையே சென்னை அணி சார்பில் 2 கோடி ரூபாய்க்கான காசோலையை அந்த நிர்வாகம் சார்பில் தோனியிடம் வழங்கப்பட்டது. ,தைத் தொடர்ந்து தோனி அந்த காசோலையை ராணுவ அதிகாரிகளிடம் வழங்கினார்.