ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு பதக்கங்களை வென்று பெருமை சேர்த்த தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி. 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தா மற்றும் பால்ம்பேங் நகரங்களில் நடந்தன. ஆசிய போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று நிறைவு விழா நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் 572 வீரர், வீராங்கனைகள் 36 போட்டிகளில் களமிறங்கி ஆடினர். 

இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலத்துடன் மொத்தம் 69 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 289 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும் 204 பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 

18வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆசிய போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழகத்தை சேர்ந்த தீபிகா பல்லிக்கல் கார்த்திக், ஜோஷ்னா சின்னப்பா, சுனாய்னா குருவில்லா ஆகிய மூன்று பேருக்கும் தலா 30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் மூவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ள முதல்வர் பழனிசாமி, மேலும் நாட்டிற்காக பதக்கங்களை குவித்து தமிழ்நாட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.