கிரிக்கெட்டை பொறுத்தவரை சிக்ஸர் என்றாலே உடனடியாக நினைவுக்கு வரும் வீரர்கள் அஃப்ரிடி மற்றும் கெய்ல்.

இருவருமே அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் மட்டுமல்லாமல் சிக்ஸர்களை விளாசுவதில் வல்லவர்கள். இவர்கள் களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் வானவேடிக்கை தான். அதிலும் கெய்லை பற்றி சொல்லவே தேவையில்லை. ஐபிஎல்லில் அவரது ஆட்டத்தைக் காணவே பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கடந்த 1998ம் ஆண்டிலிருந்து 20 ஆண்டுகளாக ஆடிவருகிறார் கெய்ல்.  443 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள கெய்ல், 476 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அண்மையில் 476வது சிக்ஸரை விளாசி, அஃப்ரிடியின் சாதனையை சமன் செய்தார்.

பூம் பூம் என அழைக்கப்படும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி, 534 போட்டிகளில் ஆடி 476 சர்வதே சிக்ஸர்களை விளாசியுள்ளார். இவரது சர்வதேச சிக்ஸர் சாதனையை கிறிஸ் கெய்ல் சமன் செய்துள்ளார். இன்னும் ஒரு சிக்ஸர் அடித்தால், கெய்ல் முதலிடத்தை பிடித்துவிடுவார். 

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கெய்ல், அஃப்ரிடியின் சிக்ஸர் சாதனையை சமன் செய்தது சிறப்பான விஷயம். இத்துடன் நிறுத்திக்கொண்டு, இனிமேல் சிக்ஸர் அடிக்க வேண்டாம் என நினைக்கிறேன். ஏனென்றால் நாங்கள் இருவருமே பெரிய சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை மகிழ்விக்கக்கூடியவர்கள். அஃப்ரிடி கவலைப்படாதீர்கள்.. நான் இனி ஒரு சிக்ஸர் அடிக்கமாட்டேன் என கெய்ல் தெரிவித்துள்ளார். 

கெய்லின் இந்த தகவல், அவர் ஓய்வு பெறப்போகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அவர் கிரிக்கெட் ஆடினால் கண்டிப்பாக சிக்ஸர் அடிக்காமல் இருக்கமாட்டார். எனவே இனிமேல் சிக்ஸர் அடிக்கமாட்டேன் என்று கூறியதன் மூலம், ஓய்வு பெற முடிவெடுத்துள்ளாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அண்மைக்காலமாக அவர் சரியாக ஆடாதது குறிப்பிடத்தக்கது. கெய்லின் இந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.