இந்திய அணி கேப்டனும் ரன் மெஷினுமான விராட் கோலியை ஆஸ்திரேலியாவில் சதமடிக்க விடமாட்டோம் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் விடுத்த சவால் பலிக்காது என முன்னாள் பவுலர் பிரெட் லீ கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் ரன்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என கோலி அழைக்கப்படுகிறார். 

இந்நிலையில், தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டி20 தொடரை வென்றுள்ளது. ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இதையடுத்து டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்டம்பர் நடுவில் முடிவடைகிறது. இதையடுத்து வரும் நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்று 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. 

இதற்கிடையே, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விராட் கோலியை சதமடிக்க விடமாட்டோம் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ, கோலி மிகச்சிறந்த வீரர். அவருக்கு இந்த ஆண்டு மிகவும் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. அவரை போன்ற ரன் வேட்கை கொண்ட ஒரு வீரரை நான் பார்த்ததில்லை.

அதனால் அவர் கண்டிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடிப்பார். ஆனால் அதேநேரத்தில், 2011-2012 மற்றும் 2014-2015 ஆகிய சுற்றுப்பயணங்களில் இந்திய அணி தடுமாறியது. இரண்டு சுற்றுப்பயணங்களின்போதும் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. எனவே இந்திய அணியை வீழ்த்துவது பவுலர்களின் கையில்தான் உள்ளது என்றார். 

2011-2012 சுற்றுப்பயணத்தின்போது, 4-0 என இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. அதேபோல், 2014-2015 சுற்றுப்பயணத்தின் போது 2-0 என தொடரை இழந்தது. 

2014-2015ல் இந்திய அணி தொடரை இழந்தாலும் கோலி மிகச்சிறப்பாக ஆடினார். 4 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்களுடன் 992 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.