உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் நாக் ஔட் சுற்றுக்கு பிரேசில் அணி அசத்தலாக முன்னேறியது.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இ பிரிவு லீக் சுற்று மாஸ்கோவில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் பிரேசில் - செர்பியா அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் ஔட் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் செர்பியா அணி இருந்தது.

ஆனால், இந்த ஆட்டத்தை சமன் செய்தாலே அடுத்த சுற்றுக்கு எளிதாக முன்னேறிவிடலாம் என்ற உற்சாகத்தில் பிரேசில் அணி களமிறங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணி வீரர்களுமே தொடக்கத்தில் இருந்தே கோல் அடிக்க முயன்றனர. அதற்கு  பலனாக பிரேசில் அணிக்கு 36-வது நிமிடத்தில் பாலின்ஹோ கோல் அடித்து அசத்தினர்.

இதையடுத்து, பதில் கோல் அடிக்க செர்பியா வீரர்கள் முயற்சித்தும் பிரேசிலுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால், முதல் பாதி ஆட்டத்தில் பிரேசில் அணியின் கை ஓங்கியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் பிரேசில் வீரர்களின் ஆதிக்கமே ஓங்கியிருந்தது. ஆட்டத்தில் 68-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் தியாகோ சில்வா கோல் அடித்து, தனது அணிக்கு 2-0 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தார்.

இதன்மூலம் ஆட்டம் முழுமையாக பிரேசில் அணி வசம் வந்தது. ஆட்டத்தில் இறுதி வரை செர்பியா வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

இதனால் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நாக் ஔட் சுற்றுக்கு அசத்தலாக முன்னேறியது.