முதுகு வலியுடன் முழு உடற்தகுதி பெறாமல் இருந்த புவனேஷ்வர் குமாரை மூன்றாவது ஒருநாள் போட்டியில் அணியில் ஆடவைத்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. 

இந்திய அணியின் நட்சத்திர பவுலர் புவனேஷ்வர் குமார், இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. முதுகுவலியால் தவித்துவரும் அவர், இந்தியா திரும்ப உள்ளார்.

முதுகுவலி முழுமையாக குணம் அடையாத நிலையில், அவரை மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆடவைத்ததே வலி அதிகமானதற்கு காரணம் என சர்ச்சை எழுந்துள்ளது. முழு உடற்தகுதி இல்லாத புவனேஷ்வர் குமாருக்கு அணியின் உடற்தகுதி நிபுணர் பாட்ரிக் பர்ஹத் மற்றும் உடற்பயிற்சியாளர் சங்கர் பாசு ஆகியோர் எப்படி புவனேஷ்வர் குமாருக்கு உடற்தகுதி சான்றிதழ் வழங்கினார்கள் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. 

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், புவனேஷ்வர் குமார் உடற்தகுதி குறித்து எங்களிடம் கேட்காதீர்கள். அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேளுங்கல். புவனேஷ்வர் குமார் முழு உடற்தகுதியுடன் இல்லை என்பதால் அவருக்கு நீண்ட ஓய்வு அளிக்க வேண்டும் என கூறியிருந்தோம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முக்கியம் என்பதால், அதற்கு தயாராகும் வகையில், அவருக்கு ஓய்வளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தோம். 

அதற்காகத்தான் அவரை ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் தொடரில் கூட ஆட விடவில்லை. புவனேஷ்வர் குமார், இந்திய அணியின் நட்சத்திர பவுலர் என்பதால்தான், அவருக்கு அதிக பளு கொடுக்கக்கூடாது என்பதற்காக ஐபிஎல்லிலும் அவ்வப்போது ஓய்வளிக்க வேண்டும் என அவர் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் கேட்டுக்கொண்டிருந்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று 17 போட்டிகளில் 5ல் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 

இவ்வாறு புவனேஷ்வர் குமாரின் உடற்தகுதியில் அக்கறையுடன் செயல்பட்டு வந்தோம். ஆனால் இங்கிலாந்தில் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை. அவருக்கு ஒரு டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஓய்வு அளிக்கப்பட்டது. ஏற்கனவே முதுகுவலியில் தவித்த அவருக்கு அந்த ஓய்வு போதாது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவரை ஆட வைத்திருக்க கூடாது. அதில் ஆடியதால் முதுகுவலி அதிகமாகி இப்போது, முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பை இழந்து, நாடு திரும்ப உள்ளார். 

அணியின் உடற்தகுதி நிபுணர் பர்ஹத், புவனேஷ்வர் குமாரின் உடல்நிலையை ஆய்வு செய்து 3வது போட்டியில் ஆடினால் காயம் அதிகமாகும் என்று அறிக்கை ஏதும் அளித்தாரா? அல்லது எச்சரிக்கை செய்தாரா? போன்ற கேள்விகளுக்கு பதில் தேவை என கோபத்துடன் தெரிவித்துள்ளார்.