பிசிசிஐ ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகிய மூவரையும் அதிலிருந்து விடுவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்திய அணிக்காக சிறப்பான பங்காற்றிய வீரர்களில் சச்சின், கங்குலி, விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் முக்கியமானவர்கள். மூவருமே அவர்களது காலக்கட்டத்தில் சிறந்து விளங்கிய வீரர்கள்.

மூவரும் ஓய்வு பெற்றுவிட்டதை அடுத்து அவர்கள் பிசிசிஐ ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணிக்கான தகுதியான பயிற்சியாளரை பரிந்துரைப்பதே இவர்களின் பணி. இந்த பணியை ஊதியம் பெறாமல் அவர்கள் கவனித்து வந்தனர். ஆனால் தற்போது ஆலோசனை குழுவில் இருப்பவர்களுக்கு ஊதியம் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

பிசிசிஐ ஊதியம் வழங்கினால், இவர்கள் மூவரும் இரட்டை ஊதியம் பெறக்கூடிய சூழல் உள்ளது. ஏனென்றால், ஏற்கனவே கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் வாரிய தலைவராக உள்ளார். லட்சுமணன், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகராக உள்ளார். சச்சின் டெண்டுல்கரின் மகன் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் உள்ளார். 

எனவே இவர்கள் மூவரும் ஆலோசனைக்குழுவில் நீடிக்க முடியாத நிலை உள்ளதால், அவர்கள் ஆலோசனை குழுவிலிருந்து விரைவில் நீக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.