டி20 லீக் போட்டிகளில் விளையாடி அடிக்கடி காயமடைவதால் வங்கதேச அணிக்காக ஆடமுடியாமல் போவதால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டி20 லீக் போட்டிகளில் ஆட வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. 

22 வயதான வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான், கடந்த 2015ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் வங்கதேச அணிக்காக 10 டெஸ்ட், 27 ஒருநாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

இவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் ஆடுவதால் அடிக்கடி காயமடைவதால், நாட்டுக்காக ஆடமுடியாமல் போய்விடுகிறது. இதுபோன்று பலமுறை, பல தொடர்களை இழந்துள்ளார். காயமடைவதும் பின்னர் தேறிவருவதும் மறுபடியும் காயமடைவதும் இவரது கிரிக்கெட் வாழ்க்கையில், வாடிக்கையாக உள்ளது. 

இவர் ஐபிஎல் தொடரிலும் ஆடிவருகிறார். 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும், 2018 ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் ஆடினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியபோது ஏற்பட்ட காயத்தால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரஹ்மான் ஆடவில்லை. 

டி20 லீக் போட்டிகளில் ஆடி, அடிக்கடி காயமடைந்து, நாட்டுக்காக ரஹ்மான் ஆட முடியாமல் போவதால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு லீக் போட்டிகளில் ஆட அவருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.