ஆசிய போட்டியில் மல்யுத்தம் 65 கிலோ ஃப்ரீஸ்டைலில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 2018 ஆசிய போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இது.

இந்தோனேஷியாவின் ஜகர்த்தா மற்றும் பாலேம்பங்கில் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. துப்பாக்கி சுடுதலில், ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது.

இந்தியா பதக்கம் வெல்ல சிறந்த வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட போட்டிகளில் மல்யுத்தமும் ஒன்று. 74 கிலோ ஃபீரிஸ்டைலில் இந்தியாவின் சுஷில் குமார், பஹ்ரைனின் பேடிரோவிடம் 3-5 என தோல்வியை தழுவினார். 

ஆனால், 65 கிலோ ஃப்ரீஸ்டைலில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, அபாரமாக ஆடி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். முதல் சுற்றில் உஸ்பெஸ்கிஸ்தானின் சிரோஜிடினை 13-3 என வீழ்த்தி காலிறுத்திக்கு தகுதி பெற்றார்.

காலிறுதி:

காலிறுதி சுற்றில், பஜ்ரங் புனியா டஜிகிஸ்தானின் ஃபேய்ஸி அப்துல்கோசிமை எதிர்கொண்டார். அந்த சுற்றிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பஜ்ரங் புனியா, 12-2 என அப்துல்கோசிமை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதி:

அரையிறுதியில் மங்கோலியாவின் பட்சுலுனுடன் பஜ்ரங் மோதினார். இந்த சுற்றில் அபாரமாக ஆடிய பஜ்ரங், பட்சுலுனை ஒரு பாயிண்ட் கூட எடுக்கவிடவில்லை. இந்த சுற்று முழுவதும் ஆதிக்கம் செலுத்திய பஜ்ரங் 10 புள்ளிகளை பெற்றார். பட்சுலுன் ஒரு புள்ளி கூட பெறவில்லை. இதையடுத்து 10-0 என அபாரமாக வென்ற பஜ்ரங் புனியா, இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். 

இறுதி போட்டி:

இறுதி போட்டியில் பஜ்ரங் புனியா, ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்தது. எனினும் டகாடனியின் மீது ஆதிக்கம் செலுத்திய பஜ்ரங், இறுதியில் 11-8 என வெற்றி பெற்று தங்கம் வென்றார். 

2018 ஆசிய போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இது. ஆசிய போட்டியில் பஜ்ரங் புனியா வெல்லும் இரண்டாவது பதக்கம். 2014 ஆசிய போட்டியில் பஜ்ரங் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.