கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, கொரோனாவிலிருந்து மக்களை காப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் விளைவாக பணிக்கு செல்ல முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தை பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.

ஆனாலும் தினக்கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கபட்டுள்ளார்கள். ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றோர் பசியால் வாடக்கூடாது என்பதற்காக அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அவற்றை ஈடுகட்ட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளையும் நிவாரண நிதியையும் அறிவித்துவருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக, ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை லால் பாபா அரிசி ஆலையுடன் இணைந்து கங்குலி வழங்கியுள்ளார்.

கங்குலியின் முன்னெடுப்பை கண்டு, பணவசதி படைத்த பலரும் இதுபோன்று, அரசுடன் இணைந்து உதவ முன்வந்தால், யாரும் பசியால் வாடக்கூடிய நிலையே இருக்காது. இந்நிலையில், கங்குலியை தொடர்ந்து பேட்மிண்ட்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஆந்திரா மாநில முதல்வர் நிதிக்கு ரூ.5 லட்சத்தை தனது பங்களிப்பாக வழங்கியுள்ளார் பி.வி.சிந்து. பி.வி.சிந்துவே 5 லட்சம் ரூபாய் வழங்கும்போது, விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி என கோடிகளில் குளிப்பவர்களும் உதவ முன்வரலாம்.