கோலியை கிண்டல் செய்வதை வாடிக்கையாக கொண்ட ஆஸ்திரேலிய ஊடகங்கள், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டு கோலியை கிண்டலடித்துள்ளது. 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்துவருகிறார். இதை பெரும்பாலும் அனைத்து முன்னாள் ஜாம்பவான்களும் ஒப்புக்கொண்டு விட்டனர். சாதனைகளையும் சதங்களையும் குவித்து வருகிறார் கோலி. சச்சினின் சாதனைகளை கோலி முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறந்த வீரராக வலம்வரும் கோலியை, கிண்டல் செய்யும் பணியை முழு மகிழ்ச்சியுடன் செய்துவருவது ஆஸ்திரேலிய ஊடகங்கள். கடந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று ஆடியபோது, விராட் கோலியை மோசமாக கிண்டல் செய்தும் விமர்சித்தும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுதின. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சென்றபோது 5 டெஸ்ட் போட்டிகளின் 10 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே வெறும் 134 ரன்கள் மட்டுமே கோலி எடுத்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான 2014 டெஸ்ட் தொடரில் ஸ்விங் பந்துகளில் ஆட கோலி திணறினார். 10 இன்னிங்ஸ்களில் 7ல் அவுட்சைடு எட்ஜ் ஆகி, ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் கோலி.

கடந்த முறை சரியாக ஆடாததற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பிலும் இந்த முறை கோலி சிறப்பாக ஆடுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் வீரர்கள் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர். தற்போது இருக்கும் கோலி, 2014ல் இருந்த கோலி அல்ல என்றெல்லாம் கூறிவரும் நிலையில், ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று கோலி, 2014 டெஸ்ட் தொடரில் திணறிய வீடியோவை வெளியிட்டு கிண்டலடித்துள்ளது. 

கோலி அவுட்டானதை எல்லாம் தொகுத்து ஒரு வீடியோவை வெளியிட்டு, இதுதான் கோலிக்கு மிகவும் பிடித்த ஷாட் என கிண்டலாக பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. 

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ffoxsportsaus%2Fvideos%2F2090859447592517%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

ஆஸ்திரேலிய ஊடகத்தின் கிண்டலுக்கு கோலி தனது பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.