முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓராண்டு சர்வதேச போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனியர் வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் திணறியது. 

இங்கிலாந்திடம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்திலும் தோல்வியடைந்தது. அதன்பிறகு நடந்த ஒரே ஒரு டி20 போட்டியிலும் தோல்வியை தழுவியது. 

இங்கிலாந்திடம் மரண அடி வாங்கிய ஆஸ்திரேலியா, தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரில் ஆடிவருகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடந்துவருகிறது. 

இதன் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது. இன்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங் செய்ய விரும்பியதால், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையை தொடக்கத்திலேயே சரிக்க தொடங்கினார் ஸ்டேன்லேக். முகமது ஹஃபீஸ், ஹூசைன் டலட், ஃபகார் மற்றும் சர்ஃபராஸ் அகமது ஆகிய நான்கு விக்கெட்டுகளை 24 ரன்களுக்கு உள்ளாகவே ஸ்டேன்லேக் வீழ்த்திவிட்டார். பாகிஸ்தான் வீரர்கள் யாருமே சோபிக்கவில்லை. அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி, 19.5 ஓவரில் 116 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டேன்லேக் 4 விக்கெட்டுகளையும் ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து 117 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஷார்ட் 15 ரன்களில் வெளியேறினர். அதன்பிறகு ஆரோன் ஃபின்ச்சுடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. குறிப்பாக ஃபின்ச் மிகவும் ஆக்ரோஷமாக ஆடினார். 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை 11வது ஓவரிலேயே வெற்றி பெற செய்தார் ஃபின்ச்.

10.5வது ஓவரிலேயே இலக்கை எட்டி ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணிக்கு, இந்த வெற்றி உத்வேகத்தை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.