ஆசிய விளையாட்டு போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய விளையாட்டு விழாவாக ஆசிய போட்டிகள் திகழ்ந்துவருகின்றன.

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் இன்று கோலாகலமாக கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. 

கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள், லேசர் ஒளி வெள்ளத்தில் சாகசங்கள், வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெற்றன. தொடக்க விழாவில் 4 ஆயிரம் கலைஞர்கள் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தனர். 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து சென்றனர். இந்திய வீரர் வீராங்கனைகள் குழுவிற்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேசியக்கொடி ஏந்தி தலைமை தாங்கி சென்றார்.

ஆசிய போட்டிகளில் இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 10,000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில்  572 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். அதிக பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

டென்னிஸ், பேட்மிண்டன், தடகளம், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, கால்பந்து, ஹாக்கி, நீச்சல், துப்பாக்கி சுடுதல் உள்பட 40 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 572 வீரர், வீராங்கனைகள் 36 போட்டிகளில் களமிறங்குகின்றனர். சுஷில் குமார் (மல்யுத்தம்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), மானு பாகெர் (துப்பாக்கி சுடுதல்), பி.வி.சிந்து (பேட்மிண்டன்), வினேஷ் போகத் (மல்யுத்தம்), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.