ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித், தவான், புவனேஷ்வர், பும்ரா, சகால் அணிக்கு திரும்பினர்.

வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ், மெகிதி ஹசன் ஜோடி அபார துவக்கம் தந்தது. புவனேஷ்வரின் 5வது ஓவரில் லிட்டன் அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார். தொடர்ந்து மிரட்டிய இவர் சகால் பந்துவீச்சில் இரண்டு சிக்சர் பறக்கவிட்டார்.

குல்தீப் பந்தை மெகிதி பவுண்டரிக்கு அனுப்பினார். இவர்களை பிரிக்க கேதர் ஜாதவை அழைத்தார் ரோகித். இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. இவரது 'சுழலில்' முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தபோது, மெகிதி 32 ரன்களில்  ஆட்டமிழந்தார்.

சகால் வீசிய  பந்தில் இம்ருல் 2 ரன்களிலும், முஷ்பிகுர் 5 ரன்களிலும் வெளியேறினர்.  மிதுன் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனதால்  இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். குல்தீப் 'சுழல்' வலையில் மகமதுல்லா 4 ரன்களும்,  லிட்டன் தாஸ் 121  ரன்களும்,  மொர்டசா 7 ரன்களிலும் வெளியேறினர்.

அதற்குப் பின் வந்தவர்கள் ஏமாற்றியபோதும், சவுமியா சர்கார் 33 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு சற்று ஆறுதல் அளித்தார். ஆட்ட  முடிவில், வங்கதேச அணி 48.3 ஓவரில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் மற்றும்  தவான் நல்ல  துவக்கம் தந்தனர். ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நஜ்முல் பந்தில் தவான்  15 ரன்கள் எடுத்திருந்போது அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய ராயுடு 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார்.

இதைத் தொடர்ந்து முஷ்தபிஜுர் ருபைல் பந்தில் ரோகித் 48 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.அடுத்து  தினேஷ் கார்த்திக், தோனி இணைந்து நிதானமாக விளையாடினர். நான்காவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தபோது, தினேஷ் கார்த்திக் 37 ரன்களில் அவுட்டானார். முஸ்தபிஜுர் 'வேகத்தில்' தோனி 36 ரன்களில்  அவுட்டாக, நெருக்கடி ஏற்பட்டது.

அடுத்து ஜாதவ் தொடைப்பகுதி காயம் காரணமாக வெளியேறினார். இருப்பினும், ஜடேஜா, புவனேஷ்வர் இணைந்து நம்பிக்கை அளித்தனர். ருபைல் பந்தை புவனேஷ்வர் சிக்சருக்கு பறக்கவிட்டார். ஆனால் ஜடேஜா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது காயத்துடன் மீண்டும் களமிறங்கினார் ஜாதவ். ஆனால்  புவனேஷ்வர் 21 ரன்களில்  அவுட்டாக, இந்திய ரசிகர்கள் பதட்டம் அடைந்தனர்.

இறுதியில்  மகமதுல்லா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. முதல் ஐந்து பந்தில் 5 ரன்கள் கிடைக்க, கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. அப்போது கடைசிப் பந்தில் ஜாதவ் பந்தை பின் பக்கம் தட்டி விட்டு அதிரடியாக ஒரு ரன் எடுத்தார். அந்த கடைசி நேர பரபரப்பில் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டனர். கடைசியில் , இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்து 'த்ரில்' வெற்றி பெற்றது. ஜாதவ்  23 ரன்களிலும், குல்தீப் 5 ரன்கள் எடுத்தும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

ஆசிய கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை 6 முறை (1984, 1988, 1990-91, 1995, 2010, 2016) கோப்பை வென்றிருந்தது. தற்போது  மீண்டும் அசத்திய இந்தியா 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.