ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியினர் விளையாடுவதற்கு, வீரேந்திர சேவாக் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். தற்போது இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய அணிக்கு, செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து இடைவெளி இன்றி போட்டிகளில் விளையாடும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரில் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளில், இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகள் விளையாடுகின்றன. 

இதில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, செப்டம்பர் 18ம் தேதி லீக் சுற்றில் தகுதி பெறும் அணியை எதிர்கொள்கிறது. உடனே செப்டம்பர் 19ம் தேதியன்று பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. வீரர்களுக்கு போதிய அவகாசம் இன்றி இந்த அட்டவணை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த போட்டி அட்டவணைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடக்கூடாது. முதல் நாள் போட்டி முடிந்து ஓய்வு எடுக்க அவகாசம் இன்றி அடுத்த நாளே போட்டி விளையாடும்படி அட்டவணை வகுத்துள்ளனர். 

அதுவும் பாகிஸ்தான்கூட இந்தியா மோதும் போட்டியை உலகமே பார்க்கும். அந்த போட்டிக்கு முன்னர் இந்திய வீரர்கள் போதுமான பயிற்சியில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கு ஓய்வும் தேவை. அதை கவனத்தில் கொள்ளாமல் முதல் போட்டி முடித்து, உடனே 2வது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும்படி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. அப்படி செய்வது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கவே செய்யும். எனவே இந்த அட்டவணையை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இந்த போட்டியில் பங்கேற்பதை தவிர்ப்பது பற்றி பிசிசிஐ பரிசீலிக்க வேண்டும், என சேவாக் குறிப்பிட்டுள்ளார்.