இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக பந்துவீச உள்ளதாக ஸ்பின் பவுலர் அஷ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளுமே உள்ளன. 

முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த அணியில் அஷ்வின், ஜடேஜா ஆகிய இரண்டு ஸ்பின்னர்களும் வழக்கம்போல இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து மண்ணில், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் திறமையாக பந்துவீசிய குல்தீப் யாதவும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஏற்கனவே ஒருநாள் அணியில் இடம் கிடைக்காமல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடிவரும் அஷ்வின், தனது திறமையை மீண்டும் நிரூபித்து மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறும் முனைப்பில் உள்ளார். இந்த மூன்று ஸ்பின்னர்களில் இருவர் மட்டுமே இந்திய அணியில் இடம்பெறுவர். அந்த இருவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அஷ்வினும் குல்தீப்பும் இடம்பெற வாய்ப்புள்ளது. 

இந்த டெஸ்ட் தொடரில் திறம்பட செயல்பட்டு, மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறும் முனைப்பில் உள்ள அஷ்வின், இந்த தொடர் குறித்து பேசியுள்ளார். அப்போது, இங்கிலாந்து சிறப்பான இடம். இங்கு சூழலை புரிந்துகொண்டு பந்துவீசுவதுதான் முக்கியம். நீண்ட டெஸ்ட் தொடரில் தொடர்ந்து உத்வேகத்தை காட்டுவது அவசியம். அதன்மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். டெஸ்ட் போட்டிகளில் எனது அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக பந்துவீசுவேன் என அஷ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.