சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பில் சிறந்த ஆல் ரவுண்டர் பட்டியலில் அஷ்வினும் இணைந்துள்ளார்.

பவுலிங் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஷ்வின், ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக சேர்க்கப்படுவதில்லை. சாஹல் மற்றும் குல்தீப்பின் வருகையால் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து அஷ்வின் ஓரங்கட்டப்பட்டுள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடிவருகிறார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார். 

இங்கிலாந்தில் நடந்துவரும் டெஸ்ட் போட்டிகளில் கூட சிறப்பாக ஆடிவருகிறார் அஷ்வின். முதல் டெஸ்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. இந்த இன்னிங்ஸில் இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் குவித்தது அஷ்வின் தான். 29 ரன்கள் அடித்தார் அஷ்வின். 

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 3000 ரன்களை அஷ்வின் எட்டியுள்ளார். 3000 ரன்களை எட்டியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் கபில் தேவ், கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோருடன் அஷ்வினும் இணைந்துள்ளார். 

அஷ்வின் 60 டெஸ்ட் போட்டிகள், 111 ஒருநால் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 217 சர்வதேச போட்டிகளில் ஆடி 525 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 3013 ரன்களை குவித்துள்ளார்.