சாஹல், குல்தீப் அணியில் இருந்தாலும் அஷ்வினையும் அணியில் சேர்க்கலாம் என கருத்து தெரிவித்துள்ள காம்பீர், எதற்காக என்பதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். 

தோனி தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர்களாக வலம்வந்த அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல் மற்றும் குல்தீப்பின் வருகையால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஒதுக்கப்பட்டனர்.

தற்போது அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், அஷ்வினை இந்திய அணியில் சேர்ப்பது குறித்து முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய காம்பீர், சாஹல் மற்றும் குல்தீப்புடன் அஷ்வினும் அணியில் இருந்தால் மூன்று ஸ்பின்னர்கள் கிடைப்பார்கள். அது அணிக்கு சிறப்பானதாக அமையும். மேலும் அஷ்வின் பேட்டிங்கும் ஆடக்கூடியவர். எனவே அவரை நான்காவது வீரராகவோ அல்லது 7வது வீரராகவோ களமிறக்கலாம். அதனால் ஸ்பின் ஆல்ரவுண்டரான அஷ்வினை அணியில் சேர்ப்பதன் மூலம் ஒரு பேட்ஸ்மேனும் கூடுதலாக கிடைக்கும். அஷ்வின் நான்காவது இடத்திலும் ராகுலை 5வது இடத்திலும் களமிறக்கலாம். ராகுலை 4வது இடத்தில் களமிறக்கினால் அஷ்வினை ஹர்திக் பாண்டியாவிற்கு அடுத்து 7வது வீரராக களமிறக்கலாம் என காம்பீர் ஆலோசனை கூறியுள்ளார்.