இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை இந்திய அணியும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் வென்றன. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. 

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்தது. இந்திய அணி விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்களை சேர்த்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. 13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை நேற்றைய ஆட்ட நேர முடிவிற்கு சற்று முன் தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் குக்கை போல்டாக்கி அனுப்பினார் அஷ்வின். நேற்றைய ஆட்டநேர முடிவில் 9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து இந்திய அணியை விட 22 ரன்கள் முன்னிலையில் இருந்தது இங்கிலாந்து அணி.

மூன்றாம் நாளான இன்று, ரூட்டும் ஜென்னிங்ஸும் களமிறங்கினர். 8வது ஓவரின்(இன்றைய நாளின் 4வது ஓவர்) 4வது பந்தில் ஜென்னிங்ஸை வீழ்த்தினார் அஷ்வின். அஷ்வினின் பந்தில் ஸ்லிப்பில் நின்ற ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜென்னிங்ஸ்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. ரூட்டும் மாலனும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.