இலங்கை ஜூனியர் அணிக்கு எதிராக ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்துள்ளார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய ஜூனியர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று ஆடிவருகிறது. 

அர்ஜூன் டெண்டுல்கர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டபோது பல விமர்சனங்கள் எழுந்தன. அது ஒருபுறமிருக்க, இலங்கை சென்றுள்ள இந்திய ஜூனியர் அணி, இலங்கை ஜூனியர் அணியுடன் 2 யூத் டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 யூத் ஒருநாள் போட்டிகளில் ஆடிவருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

 

இந்த போட்டியில் முதலில் இலங்கை ஜூனியர் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணியின் மிஷ்ராவின் விக்கெட்டை வீழ்த்தி தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். இந்த இன்னிங்ஸில் 11 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 

இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடியது. அதர்வா மற்றும்  ஆயுஷ் பதோனி ஆகியோரின் அபார சதத்தால் இந்திய அணி 589 ரன்களை குவித்தது. 9வது வீரராக களமிறங்கிய அர்ஜூன் டெண்டுல்கர் 11 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். முதல் போட்டியிலேயே அர்ஜூன் டக் அவுட் ஆனது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

இரண்டாவது இன்னிங்ஸிலும் அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை ஜூனியர் அணி 324 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

அர்ஜூன் டெண்டுல்கர், இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து இரண்டு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். பேட்டிங்கில் ரன் ஏதும் எடுக்கவில்லை. சச்சின் மகன் அர்ஜூன் முதல் போட்டியில் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக சோபிக்கவில்லை. 

சச்சின் டெண்டுல்கரும் அவரது முதல் சர்வதேச போட்டியில் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.