தன்னை பொதுவெளியில் அவமானப்படுத்தி விட்டதாக கூறி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகிய இருவருக்கும் நடிகர் அர்ஹான் சிங் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் காரில் சென்றபோது, மற்றொரு காரில் சென்ற ஒருவர் குப்பையை குப்பை தொட்டியில் வீசாமல் சாலையில் வீசினார். இதைக் கண்ட அனுஷ்கா சர்மா, அந்த காரை அருகில் அழைத்து குப்பையை சாலையில் போட்டவரிடம், சாலையில் வீசாதீர்கள்; குப்பை தொட்டியில் போடுங்கள் என கண்டிப்புடன் கூறினார். 

அதை வீடியோ எடுத்த விராட் கோலி, அத்துடன் இல்லாமல் அதை டுவிட்டரிலும் பகிர்ந்தார். அந்த நபரை அனுஷ்கா சர்மா கண்டித்த வீடியோவை பகிர்ந்த விராட் கோலி, சிலர் சாலையில் குப்பையை வீசுகிறார்கள். இவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். சொகுசு காரில் செல்கிறார்கள்; ஆனால் அவர்களுக்கு மூளை செயல்படுவதில்லை. இவர்களா நம் நாட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள போகிறார்கள்? இதுபோன்ற தவறான செயல்களை பார்த்தால் கண்டிப்பதோடு, விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். 

விராட் கோலி டுவிட்டரில் பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், அனுஷ்கா சர்மா கண்டித்த நபர் அர்ஹான் சிங் என்ற பகுதி நேர நடிகர் என்பது தெரியவந்தது. 

வாகனத்தில் செல்லும்போது கவனக்குறைவாக பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசிவிட்டேன். அது தவறுதான். அதற்காக அனுஷ்கா சர்மா கண்டித்தார். நானும் தவறுக்கு மன்னிப்பு கேட்டேன். அனுஷ்கா சர்மா அந்த விஷயத்தை பொறுமையாக கண்டித்திருந்திருக்கலாம். ஒன்றும் குறைந்து போயிருக்காது என அர்ஹான் சிங் தனது வேதனையை முகநூலில் பகிர்ந்திருந்தார்.

ஆனாலும் அந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்திவிட்டதாகவும் அதற்கு விளக்கம் கேட்டும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கு அர்ஹான் சிங் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.