இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறிவருகின்றனர். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களும் இந்திய அணி 274 ரன்களும் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் விராட் கோலி தனி நபராக போராடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். 

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஏற்கனவே 13 ரன்கள் முன்னிலையில் இருந்ததால், இந்திய அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 194 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் முரளி விஜய், தவான், ராகுல், ரஹானே, அஷ்வின் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். முதல் இன்னிங்ஸை போலவே ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று ஆடிவருகிறார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 110 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 84 ரன்களே தேவை. கோலியும் தினேஷ் கார்த்திக்கும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் சதமடித்து கடைசி விக்கெட்டாக அவுட்டான விராட் கோலி, இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடிவருகிறார். அவரது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறிவருகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய இங்கிலாந்து அணியின் சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரிக்கெட்டில் எந்த அணியும் வீழ்த்த முடியாத அணி அல்ல. தூங்க போகும்போது கூட நாங்கள் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது எப்படி என யோசிக்கிறோம். விராட் கோலி பேட்டிங் ஆடும் விதம் அபாரமானது என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.