ரஷ்யாவில் நடந்துவரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அமித் பங்கால்.

ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ஆசிய சாம்பியனாக திகழும் அமித் பங்கால், 52 கிலோ எடைப்பிரிவில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ளார். அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் சாகென் பிபோஸினோவை நேற்று(20ம்தேதி) எதிர்கொண்டார். 

அரையிறுதி போட்டிக்கான அனைத்து விறுவிறுப்பும் அந்த போட்டியில் இருந்தது. அமித் பங்கால் மற்றும் சாகென் ஆகிய இருவருமே வெற்றிக்காக கடுமையாக போராடினார். கடுமையான போட்டியாக இது அமைந்தது. இறுதியில் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியாவின் அமித் பங்கால் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

இதன்மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை 23 வயது அமித் பங்கால் படைத்தார். 

காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற மனீஷ் கௌசிக், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக பங்கேற்று விளையாடினார். அரையிறுதி வரை முன்னேறிய அவர், அரையிறுதியில் கியூபாவை சேர்ந்த ஆண்டி கோமஸ் க்ரூஸிடம் 0-5 என்ற புள்ளிக்கணத்தில் தோல்வியடைந்தார். 

இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஷஹோபிதின் சொய்ரோவை எதிர்கொள்கிறார் அமித் பங்கால்.