முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சென்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் ஆடிவருகின்றன. இந்த தொடரில் ஏற்கனவே பாகிஸ்தானுக்கும் ஜிம்பாப்வேவுக்கும் இடையே நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும், பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.

 

இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, பவுலிங் செய்ய விரும்பியதால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். அதிலும் ஃபின்ச்சின் ஆட்டம் கட்டுப்படுத்த முடியாததாக இருந்தது. அதிரடியாக ஆடிய ஃபின்ச், அரைசதம், சதம், 150 என அசராது அடித்து கொண்டே இருந்தார். 

ஜிம்பாப்வேவின் பந்துவீச்சை நொறுக்கிவிட்டார் ஃபின்ச். முதல் விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய அணி 223 ரன்களை குவித்தது. கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் 46 ரன்களில் ஷார்ட் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஃபின்ச், 172 ரன்களை குவித்து, அதே ஓவரின் 4வது பந்தில் ஆட்டமிழந்தார். ஃபின்ச்சின் ருத்ரதாண்டவத்தால், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 229 ரன்களை குவித்தது. 

230 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 20 ஓவர் முடிவில் வெறும் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ஆரோன் ஃபின்ச் அடித்த 172 ரன்கள்தான், சர்வதேச டி20 போட்டிகளில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன்னதாக அவர் அடித்த 156 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார். 

அதேபோல சர்வதேச டி20 போட்டியில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோரும், ஃபின்ச் மற்றும் ஷார்ட் இணைந்து அடித்தது தான். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 223 ரன்களை குவித்தனர். இதுதான் டி20 போட்டியில் ஒரு விக்கெட்டுக்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்.