பயிற்சியின்போது கால்பந்து ஆடுவதை நிறுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார்.

போட்டிகளுக்கு முந்தைய பயிற்சியின் ஒரு பகுதியாக கால்பந்து ஆடுவதை இந்திய கிரிக்கெட் வீரர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு கால்பந்து ஆடும்போது சில வீரர்கள் காயமுற்று அணியில் ஆடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர். 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருந்தார்.

ஆனால், பயிற்சி சமயத்தில் கால்பந்து ஆடியபோது, அவரது காலில் காயம் ஏற்பட்டதால், தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக டி20 அணியில் குருணல் பாண்டியாவும் ஒருநாள் அணியில் அக்ஸர் படேலும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

கால்பந்து ஆடியபோது ஏற்பட்ட காயத்தால், இங்கிலாந்தில் ஆடும் அரிய வாய்ப்பை நழுவவிட்டார் வாஷிங்டன் சுந்தர். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக பும்ராவும் நீக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, பயிற்சியின்போது கால்பந்து ஆடுவது ஆபத்தானதாக உள்ளது. அதனால் சில வீரர்கள் காயமடைகின்றனர். அதனால் பயிற்சியின் ஒருபகுதியாக கால்பந்து ஆடுவதை நிறுத்திவிடலாம். கிரிக்கெட் வீரர்கள் ஏன் கால்பந்து ஆடுகின்றனர்? அடுத்தடுத்து முக்கியமான தொடர்கள் உள்ளன. அதனால் முக்கியமான வீரர்களை காயத்தால் இழந்துவிடக்கூடாது என சோப்ரா எச்சரித்துள்ளார்.