இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் 2 ஒருநாள் போட்டிகளில், முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. 

தொடர் சமநிலை அடைந்துள்ள நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய விரும்பியதால் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

முதல் போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிதாக ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா சதமடித்து, ஆதிக்கம் செலுத்தியதால் அந்த போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் டாப் ஆர்டர்கள் சொதப்பிய நிலையில், மிடில் ஆர்டர்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை.

எனவே மிடில் ஆர்டரில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. பெரும்பாலானோரின் கருத்து, ரெய்னாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை சேர்க்கலாம் என்பதாக இருந்தது. அதனால் அப்படித்தான் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுலை நீக்கிவிட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். 

அதேபோல முதல் இரண்டு போட்டிகளில் உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் ஆகிய வேகப்பந்து கூட்டணி சோபிக்கவில்லை. அதனால் இருவருமே நீக்கப்பட்டுவிட்டு, புவனேஷ்வர் குமார் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.