செஸ் ஒலிம்பியாட் 2022: இந்திய அணியில் 20 வீரர்கள், வீராங்கனைகள்..! தலைமை பயிற்சியாளர் விஸ்வநாதன் ஆனந்த்
மாமல்லபுரத்தில் நடக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பில் 20 வீரர்கள், வீராங்கனைகள் கொண்ட அணி கலந்துகொள்கிறது.
தடகளத்திற்கு எப்படி ஒலிம்பிக்கோ, கிரிக்கெட்டுக்கு எப்படி உலக கோப்பையோ, அப்படித்தான் செஸ் விளையாட்டுக்கு செஸ் ஒலிம்பியாட். 43 செஸ் ஒலிம்பியாட் தொடர்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் வரும் 28ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் நடக்கிறது.
முதல் முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் தொட ர் இப்போதுதான் நடக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி உலகமே வியக்கும் அளவிற்கு செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்துவதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு, அதற்காக சர்வதேச தரத்தில் மாமல்லபுரத்தில் அரங்குகளை அமைத்திருப்பதுடன், தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறது.
இதையும் படிங்க - களைகட்டும் செஸ் ஒலிம்பியாட் திருவிழா: சென்னை வர தொடங்கிய வெளிநாட்டு வீரர்கள்
186 நாடுகளை சேர்ந்த 2500க்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடப்பதால், இந்தியா மட்டும் 2 அணிகளுடன் ஆட அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் அனைத்தும் ஒரு அணியுடன் தான் ஆடவேண்டும்.
அந்தவகையில், இந்தியா 2 ஆடவர் மற்றும் 2 மகளிர் அணிகளுடன் களமிறங்குகிறது. இந்தியா சார்பில் மொத்தமாக 20 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியனான இளம் பிரக்ஞானந்தா, ஆடவர் பி அணியில் இடம்பெற்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொள்ளும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக, 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் செயல்படுகிறார். ஸ்ரீநாத், அபிஜித் குண்டே ஆகியோர் பயிற்சியாளர்களாக செயல்படுகின்றனர்.
இதையும் படிங்க - செஸ் ஒலிம்பியாட்: நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடி செஸ் விளையாடி மாணவ, மாணவியர் அசத்தல்
கடைசி 3 மாதங்களில் சராசரியாக வீரர்கள், வீராங்கனைகளின் ரேட்டிங்கின் அடிப்படையில் இந்திய அணி தேர்வு அமைந்துள்ளது.
ஆடவர் “ஏ” அணி:
விதித் குஜராத்தி, பி. ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகைசி, எல்.நாராயணன், கே.சசிகிரண்
ஆடவர் “பி” அணி:
நிஹால் சரின், தி.குகேஷ், பி.அதிபன், ஆர்.பிரக்ஞானந்தா, ரௌனாக் சத்வானி.
மகளிர் “ஏ” அணி:
கோனேரு ஹம்பி, ஹரிகா த்ரோனவலி, ஆர்.வைஷாலி, டானியா சச்தேவ், பக்தி குல்கர்னி.
மகளிர் “பி” அணி:
வந்திகா அகர்வால், சௌமியா சுவாமிநாதன், மேரி அன் கோம்ஸ், பத்மினி ரௌட், திவ்யா தேஷ்முக்.