கொரோனா அச்சுறுத்தலால் மனித குலமே வீட்டில் முடங்கியுள்ள நிலையில், அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுடன் உரையாடுவதுடன் சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், ஸ்போர்ட்ஸ்டாருக்கு பேசிய யுவராஜ் சிங், முன்னாள் கேப்டன் கங்குலி அளவுக்கு தோனியோ கோலியோ தனக்கு ஆதரவாக இருக்கவில்லை என யுவராஜ் சிங் தெரிவித்தார்.

இந்திய அணியில் 2000ம் ஆண்டு கங்குலியின் கேப்டன்சியில் அறிமுகமாகி, அதன்பின்னர் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, தோனி, கோலி ஆகியோரின் கேப்டன்சியில்  ஆடியிருக்கிறார் யுவராஜ் சிங். 2017ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடிய யுவராஜ் சிங், இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்து, பல வெற்றிகளை குவித்து கொடுத்தவர்.

தோனி தலைமையில் இந்திய அணி 2007ல் வென்ற டி20 உலக கோப்பை தொடர் மற்றும் 2011ல் வென்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை  ஆகிய இரண்டிலுமே யுவராஜ் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. 2011 உலக கோப்பையின் தொடர் நாயகனே யுவராஜ் சிங் தான். இந்திய அணிக்காக 17 ஆண்டுகள் பல கேப்டன்களின் கீழ் ஆடிய யுவராஜ் சிங் கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் இந்திய அணியில் ஆடவில்லை. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வு அறிவித்தார்.

இந்நிலையில், தான் ஆடிய கேப்டன்கள் குறித்து ஸ்போர்ட்ஸ்டாரில் பேசிய யுவராஜ் சிங், நான் கங்குலியின் கேப்டன்சியின் கீழ் ஆடியபோது, அவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அதன்பின்னர் தோனி கேப்டனாக இருந்தார். கங்குலி மற்றும் தோனி ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்வது ரொம்ப கஷ்டம். ஆனால் கங்குலியின் கேப்டன்சியில் ஆடிய காலங்கள் மறக்கமுடியாதவை; நிறைய நல்ல நினைவுகள் அவரது கேப்டன்சியின் கீழ் ஆடிய காலங்களில் உள்ளன. கங்குலி  எனக்கு அபரிதமாக ஆதரவளித்தார். தோனியோ கோலியோ எனக்கு கங்குலி  அளவுக்கு ஆதரவளித்ததில்லை என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.