கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 800ஐ நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. நெருங்கிவிட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், இந்தியாவில் இன்னும் சமூக தொற்றாக அது பரவவில்லை. அதற்குள்ளாக ஊரடங்கு அமல்படுத்தி, மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதால், சமூக பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கடைகளுக்கு செல்லலாம் என்ற ஒரு விஷயத்தை தவறாக பயன்படுத்தி கொண்டு பலர் காரணமே இல்லாமல் பொதுவெளியில் சுற்றித்திரிகின்றனர். காரணமே இல்லாமலோ அல்லது பொய் காரணங்களை கூறியோ பைக்கிலும் கார்களிலும் சுற்றுபவர்கள் மீது போலீஸார் நாடு முழுவதும் வழக்குப்பதிவு செய்துவருகின்றனர்.

மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தொலைக்காட்சிகள் மூலமாகவும், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பலர் அலட்சியமாக வெளியே சுற்றுவதை பார்க்கமுடிகிறது. 

அரசாங்கத்தின் அறிவுரைகளை ஏற்று மக்கள் தனிமைப்படுதலையும் சமூக விலகலையும் சீரியஸாக எடுத்துக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்றும், சமூக பொறுப்பின்றி வெளியே சுற்றக்கூடாது என்றும், இக்கட்டான நிலையில் இருக்கும் நாம், அரசின் அறிவுறைகளை ஏற்று ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், விராட் கோலியும் மக்கள் தனிமைப்படுவதன் அவசியத்தை எடுத்துணர்த்தி, வீட்டில் தனிமைப்பட வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், தயவு செய்து எதார்த்தத்தை உணர்ந்து கொண்டு, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பொறுப்புணர்வுடன் மக்கள் நடந்துகொள்ள வேண்டும். இந்த நேரத்தில் நாட்டுக்கு நமது ஆதரவும், நேர்மையும் தேவைப்படுகிறது.

கடந்த சில தினங்களாக மக்கள் தெருக்களில் நடமாடுவதையும், கூட்டம் கூடுவதையும்பார்க்க முடிகிறது. கொரோனாவுக்கு எதிரான போரை நாம் எளிதாக எடுத்துக்கொண்டிக்கிறோம் என்று நினைக்கிறேன். கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டம் சாதாரணமானது அல்ல. மக்கள் அனைவரையும் மன்றாடி கேட்கிறேன். தயவுசெய்து சமூக விலகலை கடைபிடியுங்கள். அரசின் வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் சீரியஸாக பின்பற்றுங்கள். ரொம்ப நேர்மையுடன் அரசின் அறிவுரைகளை கடைபிடியுங்கள். உங்களது அலட்சியத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவரே பாதிக்கப்படக்கூடும். எனவே தயவு செய்து தனிமைப்படுங்கள்.

நமது அரசாங்கமும் மருத்துவர்களும் கொரோனாவுக்கு எதிராக தீவிரமாக உழைத்து கொண்டிருக்கிறார்கள். நாம் குடிமக்களாக நமது கடமையை, பொறுப்பை உணர்ந்து சரியாக செய்ய வேண்டும். விளையாட்டுத்தனமாக இருந்துவிட வேண்டாம். அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின் படி நடந்துகொள்ளுங்கள் என்று விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.